செய்யாறு அருகே குவாரிக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றம்!


செய்யாறு அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மகாஜனம்பாக்கம் ஊராட்சி எல்லையில் புதிதாக ஜல்லி கற்களை உடைக்க குவாரி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், மிக அருகாமையில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள குன்னவாக்கம் கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பெரிதும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதையொட்டி, குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் குவாரிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, “மகாஜனம்பாக்கம் கிராம எல்லையில் குவாரி அமைக்கப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுவது குன்னவாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிதான். இங்கு, சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். 300 மீட்டர் இடைவெளியில் குவாரி அமைவதால், கற்களை உடைக்கும்போது வீடுகள் மீது சிதறல்கள் விழுந்து பாதிக்கப்படும். இதேபோல், கற்களின் துகள்கள் படர்ந்து, முதியோர் உட்பட அனைத்து வயதினருக்கும் சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும். குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும்.

குவாரி அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தாமல் அனுமதி வழங்கப்படுள்ளது. ஏற்கெனவே தொழிற்சாலைகள் அதிகரித்து வரும் நிலையில், எஞ்சிய விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள்தான், எங்களது வாழ்வாதாரமாக உள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் சூழ்ந்துள்ள பகுதியில் குவாரி அமைக்கப்பட்டால் அனைத்தும் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, எங்களது மொத்த வாழ்வாதாரம் அடியோடு பாதித்துவிடும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பலனில்லை.

இதனால் அரசின் கவனத்தை ஈர்க்க, கிராம சபை கூட்டத்தில் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்களை பாதிக்கும் குவாரி அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகமும், திராவிட மாடல் அரசும் கைவிட வேண்டும். இல்லையென்றால், அடையாள அட்டைகள் மற்றும் குடும்ப அட்டைகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரித்தனர்.

x