“எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு தயாராகாவிட்டால் திமுகவை தோற்கடிக்க முடியாது” - கிருஷ்ணசாமி கருத்து


எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு தயாராகாவிட்டால் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பதில், திமுக கூட்டணி அல்லாத பிற கட்சிகளிடையே தற்போது வரை தெளிவற்ற நிலையே இருந்து வருகிறது. ஒற்றைக் கட்சி ஆட்சி அல்லாமல், கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், மற்ற கட்சிகள் எல்லாம் தங்களுக்குள் உள்ள ஈகோவை விட்டுவிட்டு ஒன்றிணைய வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு யாரும் தயாராகவில்லை என்றால், திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அதிமுக சேருமா, சேராதா என்பதை தற்போது உள்ள சில நகர்வுகளை வைத்து கூறிவிட முடியாது. தேர்தல் சமயத்தில்தான் அணிகள் உருவாகும். தங்களின் கட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்காக நடிகர் விஜய் பேசி வருகிறார்.

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதிமுக, திமுக ஆட்சிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத் துறை கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள 19 மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் 50 சதவீதத்துக்கு மட்டுமே அரசுக்கு வரி செலுத்தப்படுகிறது. மற்றவை திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் முறையாக விசாரித்தால் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் ஊழலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x