அரசு மருத்துவமனைகளில் யுபிஐ மூலம் மட்டுமே கட்டணம் - நோயாளிகள் அவதி


புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கான கட்டணத்தை கூகுல் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மட்டுமே வசூலிப்பதால் நோயாளிகள், உறவினர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த முறையை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் அல்லது பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் சலுகை விலையில் எடுத்துக் கொடுக்கப் பட்டு வருகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதன்படி, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இச்சேவையைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதற்காக கட்டணத்தை கூகுல் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மட்டுமே வசூலிப்பதால் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது கூறியது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோருக்கு சலுகை விலையில் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப வசூலிக்கும் தொகையை கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த முறையிலான வசதி அனைவரிடமும் இருப்பதில்லை.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் வருகிறார்கள். ஒருவேளை அத்தகைய வசதி இருந்தாலும், மருத்துவமனை வளாகத்து க்குள் நெட்வொர்க்கும் சரியாக கிடைப்பதில்லை. இதற்காக மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி உள்ளே சென்றால் வாசலில் உள்ள காவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால், பரிசோதனை மேற்கொள்ள வரும் முதியோர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே, யுபிஐ செயலிகள் வழியாக மட்டுமே பணம் வசூலிக்கும் முறையை கைவிட்டு, ரொக்கமாகவும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற பரிசோதனைகளை அரசு இலவசமாக எடுத்துக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி தரப்பில் கேட்டபோது, ”ஆன்லைன் வழியில் மட்டுமே பணம் வசூலிக்க வேண்டும். ரொக்கமாக வசூலிக்ககக் கூடாது அரசின் உத்தரவு. எனினும், இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றனர்.

x