ராமநாதபுரத்தில் முத்துராமலிங்க சேதுபதியின் 265-வது பிறந்த தினக் கொண்டாட்டம்


ராமநாதபுரத்தில்  நடைபெற்ற மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 265-வது பிறந்த தினக் கொண்டாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 265-வது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 30.03.1760 அன்று பிறந்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும், வணிகங்களையும் எதிர்த்து போராடிய மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அன்றைய ஆங்கிலேய அரசு கைது செய்து சென்னையிலுள்ள ஜார்ஜ் கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறை வைக்கப்பட்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 23.01.1809 அன்று சென்னை ஜார்ஜ் கோட்டை சிறையில் உயிர் நீத்தார்.

ராமநாதபுரத்தில் உளள முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 265-வது பிறந்த தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, மாநிலங்களவை எம்.பி தர்மர், எம்.எல்.ஏகள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடானை ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கூட்டர் வண்டிகளும், 40 பயனாளிகளுக்கு குடும்பஅட்டைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், மாவட்ட மாற்றுத் திறனாளி நலஅலுவலர் பாலசுந்தரம், செய்தி மக்கள் தொடர் அலுவலர் பாண்டி மற்றும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் வாரிசுதாரர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

x