புதுச்சேரி: முக்கிய பிரச்சினைகளில் வாய்மூடி மவுனம் காத்து ஆளும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சட்டப்பேரவையில் திமுகவின எடுத்தனர். குறிப்பாக வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற தீர்மானத்தை நிறைவேற்றாமல் திமுக வாய்மூடி மவுனம் காத்தனர் என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.
புதுவை மாநில அதிமுக சார்பில் கோடையை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் இலவச மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மோர்ப் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, கிர்ணி பழம், நுங்கு உள்ளிட்ட பொருட்களும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 6 சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துள்ள திமுக பல்வேறு முக்கியமான பிரச்சனைகளில் வாய் மூடி மவுனம் காத்து ஆளும் அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தனர். தனியார் மருத்துவ கல்லூரி அரசு இட ஒதுக்கீட்டில் தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுபடி 50 சதவீத இடங்களை பெற அரசை வலியுறுத்தாமல் மவுனம் காத்தனர்.
வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரியில் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற திமுக வாய்மூடி மவுனம் காத்தனர். இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்ததாக அரசு நினைத்துவிடும் என மவுனம் காத்தனர்'' என்றார்.