“இஃப்தார் விழா நடத்துவோர் இஸ்லாமியர்களுக்கு தீங்கு வந்தால் வாயை திறக்க மாட்டார்கள்” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்


இஃப்தார் விழாவை நடத்துபவர்கள், இஸ்லாமியர்களுக்கு தீங்கு வந்தால் வாயை திறக்க மாட்டார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில், ரம்ஜானை முன்னிட்டு 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் அடையக் கூடிய மகிழ்ச்சி, வளர்ச்சிக்கு அடித்தளமாக, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித நேயத்தையும், அன்பையும் போதிப்பது தான் இஸ்லாம் மதம். நல்லிணக்கத்தை விரும்பும் இஸ்லாமிய சமூகத்தினரையும், திமுகவையும் யாரும் பிரிக்க முடியாது.

இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை நடக்கும் போது வாயையே திறக்க மாட்டார்கள். குடியுரிமை சட்டமாக இருந்தாலும், காஷ்மீருக்கான 370-வது பிரிவை ரத்து செய்யும் சட்டமாக இருந்தாலும், முதல் எதிர்ப்பு தெரிவிப்பது திமுக-தான்.

இப்போது கூட, வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக, நாடாளுமன்றம், கூட்டுக்குழுவிலும் தொடர்ந்து திமுக சார்பில் குரல் எழுப்பி வருகிறோம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசு நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளோம். இதை பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்தத் தீர்மானத்தில் கூட, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பங்கேற்கவில்லை. அவர், இரவோடு இரவாக திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் விமானத்தில் டெல்லி சென்றார். அங்கு 4 கார் மாறி மாறி சென்று, இந்த சட்டத்தை (வக்பு திருத்த சட்டம்) கொண்டுவரப் போகும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். அடுத்து நாங்கள் தான் ஆளுங்கட்சி என்று பழனிசாமி கூறினார்.

இன்று ஒருவருக்கு பதில் கூறுவதற்காக, ‘நாங்கள் தான் அடுத்த எதிர்க்கட்சி’ என்று தெரிவித்துள்ளார். ‘ஆளுங்கட்சி ஆளுங்கட்சி’ என்று கூறிவிட்டு, ‘எதிர்க்கட்சி’ என்று கூறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். தற்போது 2-வது இடத்துக்கு யார் வருவது என்பதில் அவர்களுக்குள் போட்டி வந்துவிட்டது. நம்மை பொறுத்தவரை நாம் எப்போதும் முதலிடத்தில் ஆளுங்கட்சியாக இருப்போம். நான் இதை அகங்காரத்தில் கூறவில்லை. மக்களின் ஆதரவு வைத்து கூறுகிறேன்.

மறுநாள் தீர்மானம் கொண்டுவரப்போவது தெரிந்து, முன்கூட்டியே டெல்லி சென்று, அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்த நிலையில், ஏற்கெனவே இஸ்லாமிய சமூகத்தினர் புறக்கணித்ததால் தான் அந்த கட்சியுடன் (பாஜக) தொடர்பில்லை என்று அறிவித்துள்ளோம். இப்போது இந்த நிலை ஏற்பட்டுவிட்டதே! தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா ? என்று அதிமுக உறுப்பினர்கள் திணறினர். அதன்பின் ஆதரித்து பேசினர். இவ்வாறு பயந்து அஞ்சி நிற்கும் நிலையில் தான் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஆபத்து வந்தால், அதை எதிர்க்கும் கட்சி தான் திமுக. இடஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சமூக நீதி கிடைக்கும் வகையில் திமுக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

x