மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் ஆலய நுழைவு போராட்டம்: சீமான் எச்சரிக்கை


சென்னை: மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன் கோவிலைத் திறந்து, பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து, ஓராண்டைக் கடந்த பிறகும், தமிழ்நாடு அரசு இதுவரை அனுமதி மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசின் இத்தகைய சமூக அநீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, காலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் வழிபடக் கோயில் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது பச்சைப் பொய்யாகும். உண்மையில் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்த அரசு அனுமதிக்கவில்லை என்று மேல்பாதி மக்கள் மிகுந்த மனவேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலைத் திறக்க நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு திறக்க மறுப்பதேன்? மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால், இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி, மக்களை ஒற்றுமைப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வழிபாடு நடத்த வாய்ப்பேற்படுத்துவதே ஓர் நல்ல அரசின் கடமையாகும்.

"இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம்தான்! உண்கிற கை உயர்ந்தது, உழைக்கிற கை தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்கக் கூடாது; இறைவனுக்கு முன்பு இரு கையையும் இணைத்துதான் வணங்க வேண்டும். அப்படி இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம் என்கிற எண்ணம் இல்லாதவன், இறைவனை வழிபடவே அறுகதையற்றவன்" என்ற தாத்தா முத்துராமலிங்கத்தேவர் கூற்றுக்கிணங்க அனைத்து மக்களையும் அரவணைத்து, புரிதலை ஏற்படுத்தி, வழிபாட்டு உரிமையை பெறச் செய்வதே உண்மையான சமத்துவமாகும்.

அதைவிடுத்து, மக்களிடையே கலவரம் ஏற்படும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றெல்லாம் காரணங்களைக் கூறி, கோயிலைத் திறக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். மாணவர் வருகை குறைந்தால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுவது, வழிபாட்டில் சிக்கல் என்றால் கோயிலை இழுத்து மூடிவிடுவது என்பதுதான் திராவிடம் கட்டிக்காத்த சமத்துவமா? பெற்றுத் தந்த சமூக நீதியா?

எனவே, திராவிட மாடல் திமுக அரசின் போலி சமூகநீதி முகத்திரையைக் கிழித்து, உண்மையான சமத்துவத்தை நிலை நாட்டிட, தமிழ் இயக்கங்களை ஒன்றிணைந்து, மேல்பாதி மக்களை அழைத்துக்கொண்டு விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x