சேலம்: சேலம் மாவட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள நகைக்கடன்களை, வட்டி மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகள் விளையும் நிலையில், அவற்றுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் கண்ணாடி கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதுபோல மேலும் பல காய்கறிகள் உள்ளதால், அவற்றுக்கும் புவிசார் குறியீடு பெற வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பலர் நகைக்கடன் பெற்றுள்ளனர். இதுநாள் வரை நகைக்கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி, கடனை புதுப்பித்து வந்தனர். தற்போது, அசல், வட்டி என இரண்டையும் செலுத்தி, கணக்கை முடித்துவிட்டு மீண்டும் புதியதாக நகைக்கடன் பெற வேண்டும் என விதிமுறை மாற்றப்படுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, மீண்டும் பழைய விதிமுறைப்படியே நகைக்கடனை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், மரவள்ளிக் கிழங்குக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசு சார்பில் சர்க்கரை ஆலை, அரிசி ஆலை போன்றவை நடத்தப்படுவது போல, மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை அமைக்கப்பட வேண்டும்.
மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அவை விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதுபோல, விளை பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த உமையாள்புரம் ஏரி 20 ஆண்டுகளாக நிரம்பாத நிலை உள்ளது. எனவே, அருகிலுள்ள வசிஷ்ட நதியில் இருந்து நீரேற்றுத் திட்டம் மூலம் உமையாள்புரம் ஏரிக்கு நீர் கொண்டு வர வேண்டும். ஆத்தூரை அடுத்த துலுக்கனூர் ஏரி, புங்கவாடி ஏரி ஆகியவற்றின் நீர் வரத்து கால்வாய்கள் தூர் வாரப்படாததால், ஏரிகளை நம்பியுள்ள 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கால்வாய்களை தூர் வார வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.