புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: டெல்லியில் 60 அமைப்புகளுடன் போராட ரங்கசாமி ஆதரவு எம்எல்ஏ முடிவு


புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்த 60 சமூக நல அமைப்புகளுடன் நடந்த கூட்டத்தில் கூட்டாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதுச்சேரியில் ஆளும் அரசில் முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுமை இயக்கம் ஜெகநாதன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஜெ.சம்சுதீன், ஆம் ஆத்மி கணேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சி.ஸ்ரீதர் உட்பட்ட அறுபதிற்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எம்எல்ஏ நேரு இன்று கூறியதாவது: பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்திய தேசத்துடன் இணைந்த பிறகு நாம் எதிர்பார்த்த உரிமைகளை இந்திய அரசாங்கம் புதுச்சேரிக்கு வழங்காமல் இருந்து வருவதுடன் நிதி ஆதாரங்களையும் தர மறுக்கிறது. நமக்கான மாநில தகுதிக்கான உரிமைகளையும் தர மறுக்கிறது. நம்மை போல் சிறிய மாநிலமாக இருக்கும் கோவா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கியுள்ளது.

நம் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் தீரமானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டும் இதுநாள் வரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாநில தகுதி கொடுக்க வேண்டும் என்று பல முறை மத்திய அரசை வலியுறுத்தி கேட்ட பிறகும் புதுச்சேரிக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகையால் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கைக்காக டெல்லி சென்று போராட்டம் நடத்தி மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம். அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களை சந்தித்து புதுச்சேரி மாநில உரிமைகளுக்கு ஆதரவு அளிக்க கேட்டு பெற உத்தேசித்துள்ளோம். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தொகுதிகள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாநில அந்தஸ்து பெறுவதற்கான மக்கள் திரள் கூட்டம் நடத்தமுடிவு எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

x