மன்னார்குடியில் புறவழி சுற்றுச் சாலை பணிகள் தொடக்கம்: ரூ.113.1 கோடி ஒதுக்கீடு!


மன்னார்குடி அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் இரட்டைப் புலி பகுதியில் தொடங்கியுள்ள சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இப்பகுதியில் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அமைச்சர் டிஆர்பி.ராஜாவும் சட்டப்பேரவையில் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில், இங்கு புறவழி சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிலமெடுப்பு உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு, தற்போது முதல்கட்டமாக மன்னார்குடியில் திருத்துறைப்பூண்டி சாலையில் இரட்டைப் புலி பகுதியில் சுற்றுவட்டச் சாலை பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, அவர்கள் கூறியது: மன்னார்குடி நகரத்துக்கு வெளியே திருத்துறைப்பூண்டி சாலையில் இரட்டைப் புலி, முத்துப்பேட்டை சாலையில் சித்தேரி, அதைத் தொடர்ந்து திருமக்கோட்டை, மதுக்கூர் சாலை, வடசேரி சாலை வழியாக, தஞ்சாவூர் சாலையில் உள்ள மேலவாசல், தொடர்ந்து கும்பகோணம் சாலை, திருவாரூர் சாலையை கடந்து மீண்டும் திருத்துறைப்பூண்டி சாலையுடன் இணைக்கும் வகையில் 22 கிலோ மீட்டர் தொலைக்கு இந்த சுற்றுவட்டச் சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு உத்தேசமாக ரூ.300 கோடிக்கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது முதற்கட்டமாக ரூ.126 கோடி மதிப்பில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், திருத்துறைப்பூண்டி இரட்டைப் புலி அருகில் இருந்து மேலவாசல் வரையிலான மன்னார்குடி நகரின் வடக்கு பகுதி சுற்றுச்சாலை பணி முதல்கட்டமாக நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 பணிகளாக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி, 2 தனியார் நிறுவனங்களும் பணிகளை தொடங்கியுள்ளன என தெரிவித்தனர்.

இந்த சாலை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டுமென அமைச்சர் டிஆர்பி.ராஜா, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், ஓராண்டுக்குள் பணிகளை நடத்தி முடிக்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம் என டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

x