விழுப்புரம்: கடந்த 2013-ம் ஆண்டு, ஏப்ரல் 23-ம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு பல்வேறு வாகனங்களில் சென்றனர்.
வாய்த்தகராறில் தொடங்கி.. அப்படிச் சென்றவர்களில் சிலர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை அடைந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் விழாவுக்குச் சென்ற பாமகவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கலவரமாக மாறியது. இதில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு, தனியார் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர்கள் கலையரசன், சசிகுமார் உள்ளிட்ட 34 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மரக்காணம் காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
இவ்வழக்கில் 20 பேர் தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கை பிரித்து (Split-Up) நடத்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு வழக்குகளாக பிரித்து, வெவ்வேறு எண்ணில் வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இதில் 20 பேர் மீதான சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் கலையரசன், சசிகுமார், நிர்வாகிகள் சிவக்குமார், சங்கர், குமார், சுப்பிரமணி, சுதாகர், ஆனந்த், ராமதாஸ், செழியன், சண்முகம், ராஜசேகர், சின்னதம்பி உள்ளிட்ட 20 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதாகக் கூறி, நீதிபதி பாக்கியஜோதி தீர்ப்பளித்தார். மற்ற 14 பேர் மீதான வழக்கு வேறு எண்ணில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.