தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? அறிகுறி என்ன? - அலர்ட் குறிப்புகள்


உறவுகளின் பிரிவு, கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, தேர்வு பற்றிய அச்சம், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை என தினமும் பதைபதைக்கவைக்கும் தற்கொலை செய்திகளை அதிகம் கேள்விப்படும் காலத்தில் இருக்கிறோம்.

தற்கொலை எண்ணத்துக்கு அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்:

மனச்சோர்வுதான் தற்கொலைக்கு அடிப்படை. ஒரு நபர் மனச்சோர்வு அடைந்தால், அவரால் தர்க்கரீதியாகச் சிந்திக்க முடியாது. இயல்புக்கு மாறாக நடந்துகொள்வது, சோகமாக இருப்பது, யாருடனும் சரியாகப் பேசாமல் தனிமையை நாடுவது, திடீரென அமைதியாக இருப்பது இதன் அறிகுறிகள் ஆகும்.

அதுபோல நம்பிக்கை இல்லாமல் வெறுத்துப்போய்ப் பேசுவது, மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ தூங்குவது, பிடித்த செயல்களில்கூட ஈடுபாடு காட்டாமல் இருப்பது, இறப்பு சார்ந்து அதிகமாகப் பேசுவது, பொருத்தமில்லாமல் பிரியாவிடை சொல்வது ஆகியவை தற்கொலையின் அறிகுறிகள் ஆகும்.

இழப்பு, தோல்வி, வெறுப்பு, அவமானம், ஏமாற்றம், குற்ற உணர்வு, தன்மீது நம்பிக்கையின்மை போன்றவை தற்கொலை எண்ணத்துக்கு காரணமாகின்றன. பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுப்பவர்கள், ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்கள் தற் கொலைக்கு தூண்டப்படுகின்றனர். மன வருத்தம், மனச்சிதைவு, போதைப்பழக்கம் மற்றும் பொருளாதார காரணங்களும் எண்ண மாற்றத்துக்கு வித்திடுகின்றன.

தற்கொலைக்கு முயலும் ஒருவரின் மனநிலை மூன்று வகைப்படும்.
(1) செய்யலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் மனநிலை.

(2) உணர்வுகளைப் பாதிக்கும் செயல் ஒன்று நடக்கும்போது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் உணர்ச்சிப் பெருக்கு மனநிலை. தேர்வு முடிவு வெளியாகும் நாளில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றால், அந்த நேரம் அதைத் தடுத்துவிட்டால், பின்னர் அம்முயற்சியில் ஈடுபடமாட்டார்.
ஏனென்றால், தோல்வியை அறிந்த நாளில் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கு, பின்னர் குறைந்துவிடும் அல்லது இல்லாமல் போய்விடும்.

(3) நான் நினைப்பதுதான் சரி, அதுவே நடக்க வேண்டும் என்ற இறுக்கமான மனநிலை. நினைப்பதற்கு மாறாகவும் நடக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் இதில் அடங்கும்.

உடனே செய்யவேண்டியது: ஒருவர் தற்கொலையைப் பற்றிப் பேசினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உன்னோடு நான் இருக்கிறேன்/ இருப்பேன் என நம்பிக்கையூட்டும் வகையில் பேசுவது நன்மையளிக்கும். அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரை மனம்விட்டுப் பேசச் சொல்லி, மனவலியைக் குறைக்க வேண்டும்.

அவர் அழுதால், அழுகையை நிறுத்த முயல வேண்டாம். தற்கொலை செய்துகொள்பவரின் மனக்குமுறல் அப்போது வெளிப்படும். பின்னர், அதிலிருந்து அவரை மீட்கலாம். தற்கொலை செய்தே தீர வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் ஒருவர் இருந்தால், அந்நபரைச் சிறிது நேரம்கூடத் தனிமையில் விடக் கூடாது. உடனே, மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

x