மதுரை: மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பதிவு ஏற்கப்பட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு 2021-ம் ஆண்டு புவிசார் குறியீடு சட்ட வல்லுநர் ப.சஞ்சய்காந்தி, சென்னையிலுள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பம் செய்தார்.
நபார்டு-மதுரை வேளாண் வணிக ஊக்குவிப்பு மையம் சார்பில் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். சட்டரீதியாக பல்வேறு சட்டப்பணிகளை முடித்து 2024 நவம்பரில் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டது. தற்போது 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது புவிசார் குறியீடு பதிவு கிடைத்துள்ளது.
இதுகுறித்து புவிசார் குறியீடு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறியதாவது: மதுரை மரிக்கொழுந்து பற்றி மதுரையைச் சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் 16-ம் நூற்றாண்டிலிருந்தே ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதாவது சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் மதுரை மரக் கொழுந்து வைத்து பூ அலங்காரம் செய்வது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மண்வளம், நீர்வளம் மதுரை மரிக்கொழுந்து சாகுபடிக்கு உகந்ததாக இருக்கிறது.
அதேபோல், விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. விளாச்சேரி களிமண் பொம்மைகளை கைவினை கலைஞர்கள் நயமாக வடிவமைக்கின்றனர். இங்கு தயாராகும் நவராத்திரி களிமண் பொம்மைகள் தமிழகம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கீழக்குயில்குடி கருப்பசாமி கோயிலில் உள்ள மூலவர் களிமண்ணால் செய்யப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் மூலவர் 350 ஆண்டாக சிதைவடையாமல் இருப்பது கைவினை கலைஞர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் ஏற்கெனவே 59 வகையான பொருட்களோடு இந்த 2 பொருட்களும் சேர்த்து 61 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே தமிழகம் 2-வது இடம் பெற்றுள்ளது. இதில் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளேன். மேலும், புதிதாக 60-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என்று கூறினார்.