திண்டுக்கல்: ஆட்சி மாற்றத்துடன் கூடிய ஆட்சியில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய தமிழகம் கட்சி செயல்படுவதாக அதன் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் காவல்துறை உதவியுடன் மறைக்கப்படுகிறது.
காவல்துறையினர் வேட்டி மற்றும் துண்டு போடாத திமுகவினர் போல் நடந்து கொள்ளக் கூடாது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையாமல் உள்ளன. 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 76 பட்டியல் இன சாதி மக்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒரு சில சாதியினர் பெயரில் குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே அபகரித்துக் கொள்கின்றனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பல பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே இரண்டு மொழிகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்கு 3 மொழிகள்தான் சரி
திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களில் குற்றவாளிகள் தப்ப விடப்படுகின்றனர்.
2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என்பதுதான் எங்களது கொள்கை. அதை வைத்துதான் எங்கள் கூட்டணியும் அமையும். தேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. புதிய தமிழகம் கட்சி ஆட்சி மாற்றத்துடன் கூடிய ஆட்சியில் பங்கு என்ற கொள்கையுடன் செயல்படுகிறது, என்றார்.