கோவையில் மஞ்சள் நிறமாக மாறிய பவானி ஆற்று நீர்: அதிகாரிகள் ஆய்வு


மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும் பவானி ஆறு.

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மஞ்சள் நிறமாக மாறிய தண்ணீரை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சிறுமுகை பகுதியில் பவானி ஆறு பயணிக்கிறது.

ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார் உள்ளது. அண்மையில் சிறுமுகை அருகே சாயக்கழிவு நீர் கலந்து தேங்கி நின்றதால் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிறுமுகையை அடுத்த விஸ்கோஸ் நீரேற்று நிலையம் அருகில் உள்ள பவானி ஆற்றில் கடந்த 1 வாரமாக 3 கி.மீ. தொலைவுக்கு மஞ்சள் நிறமாக மாறி கழிவுகள்போல ஆற்றில் மிதந்து வருகிறது. தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கும் குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன், மீன்களும் இறந்து மிதக்கின்றன.

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் பவானி ஆற்றில் ஆய்வு செய்து தண்ணீர் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “ஆறு, குளங்களில் சாக்கடை நீர் கலக்கும்போது அதில் உள்ள நுண்சத்துக்கள் மூலம் பாசி அதிகம் படர்ந்து நிறம் மாறும். பவானி ஆற்றங்கரையோரம் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. எனவே, விவசாயத்திற்கு பயன்படுத்தும் உரங்கள் மழை நீருடன் கலந்து ஆற்றில் கலந்திருக்கலாம்.

ஆய்வு முடிவுகள் வரும்போது தான் என்ன காரணம் என்பது தெரியவரும். அதேபோல தண்ணீரை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு முடிவுக்கு பிறகு தான் தெரியவரும். தொழிற்சாலை கழிவு கலந்துள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.

x