சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சிவி சண்முகம், கேபி முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
இந்த சந்திப்பால் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. அதிமுக, பாஜக தலைவர்களும் இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் தேசிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
இதற்கிடையே செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணித்திருப்பது புது பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.