சென்னை: ‘‘பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு என்ற ‘வாட்ஸ் அப்’ குழு உருவாக்காப்பட்டுள்ளது. இதில், புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.
சென்னை, வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னிய பெருமாள், எஸ்.பி.ஈஸ்வரன் மற்றும் போலீசார், குழு உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர், டிஜிபி வன்னிய பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு என்ற ‘வாட்ஸ் அப்’ குழு தொடங்கப்பட்டு, அதில் ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாட்ஸ் அப் குழுவில், பெண் பயணிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் உள்ள அந்தந்த ரயில்வே போலீஸ் நிலையங்களை சேர்ந்த பெண் போலீசாரும் இடம் பெற்றுள்ளனர். ரயில் பயணத்தின்போது, பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை குழுவில் பதிவிட்டால் போதும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.