மதுரை: மதுரையில் வீட்டு வசதி வாரியத்துக்கு 50 ஆண்டுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முழு இழப்பீடு வழங்கப்படாத விவகாரத்தில் மதுரை ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வந்தவர்கள் கயிற்றை கட்டி காரை இழுததுச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையா. இவரது மனைவி மீனாட்சியம்மாள். இவர்களுக்கு சொந்மான 2 ஏக்கர் 14 சென்ட் நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்காக கடந்த 1973-ல் மாவட்ட நிர்வாகத்தால் ரூ.19,688-க்கு வாங்கப்பட்டது. தனது நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு கருப்பையா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்ட்டுக்கு ரூ.1000 வீதம் ரூ.2.14 லட்சம் வழங்க 1982-ல் உத்தரவிட்டது. இதில் குறிப்பிட்ட தொகையை வழங்கிய மாவட்ட நிர்வாகம் மீதிப் பணம் வழங்காமல் தாமதம் செய்து வந்தது.
இதையடுத்து நீதிமன்றமத்தில் உத்தரவு பெற்று மாவட்ட ஆட்சியரின் காரை 2009-ல் கருப்பையா ஜப்தி செய்தார். பின்னர் கருப்பையாவுக்கு ரூ.1 லட்சம் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை விரைவில் தருவதாக உத்தரவாதம் அளித்து கார் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 2010-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு தள்ளுபடியானது. அதன் பிறகும் பணத்தை வழங்காததால் மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அளித்த உறுதிமொழி பத்திரத்தை ரத்து செய்து வாகனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஜனவரி 21-ல் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்வதற்காக கருப்பையாவின் வாரிசுதாரர்கள், நீதிமன்ற ஊழியர் மற்றும் வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் இன்று (மார்ச் 28) மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு நின்றிருந்த ஆட்சியரின் காரை ஜப்தி செய்து எடுத்துச் செல்வதற்காக காரின் சாவியை கேட்டனர். சாவி கொடுக்க மறுக்கப்பட்டதால் காரை கயிற்றால் கட்டி ஜப்தி செய்து இழுத்துச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து, அங்கு வந்த கோட்டாட்சியர் ஷாலினி, ஜப்தி செய்ய வந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஷாலினி தெரிவித்தார். இதையேற்று ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டு கருப்யைா தரப்பினர் திரும்பினர். நீதிமன்ற உத்தரவுபடி ஆட்சியரின் காரை ஜப்தி செய்து கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவத்தால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.