காமராசர் பல்கலை.க்கு ‘கார்பஸ்’ நிதி திரட்ட சிறப்புக் குழு: செனட் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தல்


மதுரை காமராசர் பல்கலை. செனட் கூட்டம்

மதுரை: நிதி நெருக்கடியில் சிக்கிய மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துகு ‘ கார்பஸ்’ என்ற இருப்பு நிதியை திரட்ட சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என, செனட் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப்பல்கலைக்கழக கல்வி பேரவைக் கூட்டம் நேற்று நடந்த நிலையில், செனட் கூட்டம் இன்று (மார்ச் 28) நடந்தது. பல்கலை. கன்வீனர் குழு தலைவர், கல்லூரி கல்வி ஆணையருமான சுந்தரவள்ளி தலைமை வகித்தார். பதிவாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தேர்வாணையம் முத்தையா, சிண்டிக்கேட் உறுப்பினர்கள் புஷ்பராஜ், தீனதயாளன் உள்ளிட்ட செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஆளுநரால் பரிந்துரைத்த செனட் உறுப்பினரும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவருவமான என்.ஜெகதீசன் பேசும்போது, “பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கவனிக்க 4 உறுப்பினர்களைக் கொண்டு கன்வீனர் குழுவில் தற்போது 2 உறுப்பினர் மட்டுமே உள்ளனர். அதுவும் ஒரு சிண்டிகேட் உறுப்பினர் மட்டுமே பல்கலை விவகாரங்களைக் கையாளுகிறார்.

கன்வீனர் குழுத் தலைவர் சென்னையில் இருப்பதால் 2 உறுப்பினர் சில காரணங்களுக்காக குழுவிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததால் குழுவில் 2 காலியிடங்கள் ஏற்பட்டன. இக்குழுவில் காலியிடங்களை நிரப்பவேண்டும்” என, வலியுறுத்தினார்.கன்வீன் குழு தலைவர், “இப்பல்கலை சட்ட விதியின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னாள் பதிவாளர் பேராசிரியர் சங்கர் நடேசன் மற்றும் டாக்டர் ஜி. பிரபாகரன் உள்ளிட்ட பிற செனட் உறுப்பினர்களும் கன்வீனர் குழுவிலுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆளுநரால் மட்டுமே நியமிக்கப்படு கின்றனர் என, தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

இதற்கு பதிலளித்த சிண்டிகேட் உறுப்பினர் தீனதாயாளன், “புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரையிலும், இப்பல்கலை நிர்வாகத்தை சுமூகமாக நடத்த மறுசீரமைக்கப்பட்ட குழுவில் இரண்டு உறுப்பினர்களை நியமிக்கவேண்டும்” என்றார்.

வேளாங்கன்னி ஜோசப், “கன்வீனர் குழு தலைவர் முயற்சியால் இப்பல்லை பேராசிரியர், ஊழியர்களுக்கு 3 மாத நிலுவை சம்பளம் கிடைத்தது. இதற்காக அவருக்கும், அரசுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். தொடர்ந்து மாதந்தோறும் சம்பளம், ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்”, என்றார்.

பேராசிரியர் சுல்தான், “கல்லூரிகளில் பிற முதுநிலை பாடப்பிரிவுகளை விட கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு கல்வி, தேர்வுக் கட்டணம் அதிகரிப்பால் மாணவர்கள் பாதிக்கின்றனர். இதை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”, என்றார்.மீனாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் சூ.வானதி, “எங்களது கல்லூரியில் வணிகவியல்துறையில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதி கிடைத்தபோதிலும், அனுமதிக்க ரூ. 1.25 லட்சம் செலுத்தவேண்டும் என்பதால் கிடப்பில் உள்ளது. பிற பல்கலையில் இது போன்ற நடைமுறை இல்லை. எங்களது கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.கன்வீனர் குழுதலைவர்,நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

உறுப்பினர்கள், “இப்பல்கலையில் 2015-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர் அல்லாதவர்களுக்கு சென்னை தலைமை செயலக அலுவலர்களுக்கான இணையான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறியும், பல்கலை நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டும் கூடுதலாக வழங்கிய தொகையை சம்பளத்தில் பிடிக்க எதிர்ப்பு உள்ளது. இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அது பற்றி நடவடிக்கை கூடாது” என வலியுறுத்தினர்.

பேராசிரியர் வேளாங்கன்னி ஜோசப் , “பல்கலையில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தணிக்கை ஆட்சேபனையால் தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என்றார். கன்வீனர், “பல்கலை நிதி தொடர்பான எதுவாக இருந்தாலும், நிதி அலுவலரின் ஆலோசனை பரிந்துரையின்படி இருக்கவேண்டும். இது இல்லாதபோது தான் ஆடிட் பிரச்னை ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

முன்னாள் பேராசிரியர் சந்திர பிரபு, “பல்கலை. பதிவாளர் அறை உள்ளிட்ட இப்பல்கலை வளாகத்திற்கு அரசியல் பிரமுகர் உள்ளிட்ட பலர் அனுமதியின்றி வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி இது போன்ற நபர்களை தடுக்கவேண்டும். இப்பல்கலையில் முன்பெல்லாம் பல்கலை ‘கார்பஸ்’ நிதி என, சுமார் 800 கோடி வரையிலும் இருப்பு இருக்கும். தற்போதும் அது போன்ற நிதி இன்றி பல்கலை நிர்வாகம் சம்பளம், ஓய்வூதியம் வழங்க திணறுகிறது. இது போன்ற நிதியை திரட்ட முடியும்.

இதற்காக சிறப்பு கமிட்டி அமைத்து, மதுரையிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் கார்பஸ் நிதி திரட்டலாம். நிதி வழங்குவோருக்க வருமான வரி விலக்கு சலுகை வழங்கினால் ரூ. 1000 கோடி வரையிலும் சேகரிக்க முடியும். நிதி நெருக்கடி தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டில் பல்வேறு பாதிப்புகளை பல்கலை சந்திக்கும்” என்றார். கன்வீனர் குழு தலைவர், இத்திட்டம் பற்றி யோசிக்கப்படும், என்றார்.

மேலும், கூட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் சர்வதேச அளவில் இரு கட்டுரைகளை வெளியிட்டால் மட்டும் பிஎச்டி பட்டம் வழங்கப்படும் போன்ற நிபந்தனையை தளர்த்தவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் விவாதம் நடந்தது. கல்வி பேரவையில் கொண்டு வந்த 70-க்கும் மேற்பட்ட தீர்மானங்களும் செனட் கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்டன.

பல்கலை. பதிவாளர் அலுவலகம் முற்றுகை: மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள காமராசர் பல்கலை. கல்லூரியில் பொருளாதார துறை பெண் ஆசிரியைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, கமிட்டி அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்காத நிலையில், மாணவர் சங்க நிர்வாக ரேகன் சுமந்த் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் இன்று பல்கலை. பதிவாளர் அறையை முற்றுகையிட்டனர்.

அங்கு வந்த பதிவாளர் ராமகிருஷ்ணன், பெண் ஆசிரியைக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் என, உறுதியளித்தால் கலைந்து சென்றனர்.

x