காலை உணவு சாப்பிட்ட 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்: தருமபுரியில் அதிர்ச்சி


தருமபுரி: கடத்தூர் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 16 மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 125 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று காலை பள்ளியில் தயாரிக்கப்பட்ட காலை உணவான உப்புமா, சாம்பார் ஆகியவற்றை 80 மாணவர்கள் சாப்பிட்டனர். இதில் 16 மாணவர்கள் வயிறு வலிப்பதாக ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதில் ஒரு சில மாணவ, மாணவியர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கு, மருத்துவர் கனல் வேந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் அரசு மேற்பார்வையில் நடமாடும் மருத்துவக் குழுவினர் அரசுப் பள்ளியில் முகாமிட்டு அங்கிருந்த அனைத்து மாணவ, மாணவிகளையும் தீவிர பரிசோதனை செய்தனர் .

தொடர்ந்து அரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சின்னமாது, வட்டாட்சியர் வள்ளி மற்றும் போலீஸார் பள்ளிக்கு விரைந்தனர். அவர்கள் பள்ளி மாணவர்களிடமும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்கள், ஆசிரியர்களிடுமும் விசாரணை மேற்கொண்டனர்‌. மேலும், காலை உணவு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிக்கு பின்னரே மாணவர்களின் மயக்கத்துக்கு காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரில் 14 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்‌. 5-ம் வகுப்பு மாணவிகள் அக்ஷயா, மணியரசி ஆகியோர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

x