தக்காளி கிலோ ரூ 3-க்கு கொள்முதல்; விவசாயிகள் வேதனை


கிருஷ்ணகிரி: மகசூல் அதிகரிப்பு, வெளி மாநில வரத்து அதிகரிப்பால் தக்காளியை கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் தக்காளியைக் கூழாக்கும் வாகனத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 30 டன் மகசூல் கிடைக்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி, ராயக் கோட்டை மற்றும் ஓசூர் காய்கறி சந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. சந்தை க்கு வரத்தைப் பொறுத்து தக்காளி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது, உள்ளூரில் மகசூல் அதிகரிப்பு மற்றும் வெளிமாநில தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வெகுவாக சரிந்துள்ள து. தரத்தைப் பொறுத்து வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை கொள்முதல் செய்கின்றனர். சில்லறை விற்பனையில் கிலோ ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகளுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஆந்திர மாநில தக்காளி வரத்து மற்றும் உள்ளூரில் மகசூல் அதிகரித்து சந்தைக்கு தேவைக்கு அதிகமாகத் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை மிகவும் சரிந்துள்ளதோடு, விற்பனையகாமல் தேங்கி வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகும் தக்காளியை சாலையோரங்களில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்க வசதியாக மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் நடமாடும் தக்காளியைக் கூழாக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி விவசாயிகள் மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயார் செய்து விறபனை செய்தோம். இதனிடையே, இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் முடங்கியது. எனவே, இந்த வாகனத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதிப்புக் கூட்டுப் பொருட்களைச் சந்தைப்படுத்த தேவையான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உற்பத்தி செலவு அதிகம்: கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் கூறியதாவது: வேளாண் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தக்காளியைக் கூழாக்கும் இயந்திரத்துடன் கூடிய நடமாடும் வாகனங்கள் தமிழகத்துக்கு 5 வாகனங்கள் வாங்கப்பட்டன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் விவசாயிகள் வழங்கும் தக்காளியைக் கூழாக்கிக் கொடுக்கப்பட்டது. விவசாயிகள் அதை ஜாம் மற்றும் சாஸ் தயாரித்து விற்பனை செய்தனர். இதற்கு ஒரு கிலோவுக்கு உற்பத்தி செலவு ரூ.150 வரை செலவு ஏற்பட்டது. மேலும், சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்குச் சிரமம் ஏற்பட்டது.

இதனால், இந்த வாகனத்தை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்த்தனர். வாகனத்தை விவசாயிகள் மீண்டும் பயன்படுத்த முன்வந்தால், ஆட்சியரிடம் தெரிவித்து, வாகனத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x