உதகையில் தோடரின இளைஞரை புலி கொன்ற பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


உதகை: உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கவர்னர்சோலையில் 15 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கவர்னர்சோலை வனப்பகுதியில் உள்ள கள்ளக்கொரை மந்தையைச் சேர்ந்த மாசத் என்பவரின் மகன் கேந்தர் குட்டன்(38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற எருமைகள் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாக எருமைகள் வராததால் எருமைகளை தேடி அழைத்து வரவும் விறகு சேகரிக்கவும் கேந்தர் குட்டன் வன பகுதிக்குள் சென்றுள்ளார்.

இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் இரவு முழுவதும் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை மீண்டும் தேடியபோது கேந்தர் குட்டனின் உடல் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

அப்போது அவரை புலி அடித்து கொன்று பாதி உடலை சாப்பிட்டு உள்ளதைக் கண்டு கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் வனத்துறையினர் மற்றும் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புலியின் நடமாட்டத்தை கண்டறிய பழங்குடியின இளைஞரை கொன்ற இடத்தில் வனத்துறையினர் 15 கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். வனச்சரகர் மஞ்சு ஹாசினி தலைமையில் வனவர் ஹரிஹரசுதன் மற்றும் வன ஊழியர்கள் கேமராக்களை அமைத்தனர்.

வனச்சரகர் மஞ்சு ஹாசினி கூறும் போது, ''இளைஞரை கொன்ற விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் கண்காணித்து பின்னர் கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

வன அலுவலர் கவுதம் கூறும் போது, ''உயிரிழந்த இளைஞரின் தாயிடம் உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. தோடர் மக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தனியாக வனப்பகுதியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சில கோரிக்கைகள் கூறியுள்ளனர். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ராசா நிதியுதவி:

நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று உயிரிழந்த கேந்தர்குட்டன் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மாவட்ட திமுக சார்பில் உயிரிழந்த இளைஞரின் தாயிடம் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார். மேலும், அவரது அண்ணன் மகள் ரினித்தாவின் சட்ட படிப்பிற்காக நீலகிரி மாவட்ட திமுக சார்பாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்து, தோடர் பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் கூறும் போது, ''வன விலங்கு தாக்கி உயிரிழந்த கேந்தர்குட்டன் குடும்பத்தாருக்கு மாவட்ட திமுக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. அவரது அண்ணன் மகள் பெங்களூரில் சட்டம் பயின்று வருகிறார். அவரது கல்வி கட்டணம் திமுக சார்பில் செலுத்தப்படும். மேலும், தோடர் மக்கள் எருமைகள் மேய்ச்சல் நிலத்தில் அந்நிய தாவரங்களை அகற்ற வேண்டும் எனவும், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அவர்களது கோரிக்கைகளை வனத்துறையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்'' என்றார்.

நிகழ்வில், திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

x