சேலம் மேயருக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய அலுவலக அறை தேவையா? - அதிமுக கொந்தளிப்பு


படம்: என். குரு பிரசாத்

சேலம்: பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், சாலை, சாக்கடை வசதிக்கு தீர்வு காணாமல், சேலம் மாநகராட்சி மேயருக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய அலுவலக அறை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சியின் புதிய ஆணையர் இளங்கோவனை மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஆனைவரதன் (அதிமுக): எனது 60-வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் ஓடை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிதாக கட்டித்தர வேண்டும். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெரு விளக்குகள் உட்பட அடிப்படை பிரச்சினைகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

குணசேகரன் (திமுக): மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை தாமதம் இன்றி நிறைவேற்ற ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்..

திருஞானம் (திமுக): அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும். குமரகிரி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும்.

உமாராணி (திமுக): மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்துக்கான விதிகள் அடங்கிய தீர்மானத்தில், மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அதிகாரிகள் தெளிவாக விளக்க வேண்டும். அதே நேரத்தில், மக்களுக்கு ஏற்படும் சுமைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

செல்வராஜ்(அதிமுக): பயோ காஸ் தயாரிக்க தனியார் நிறுவனத்துக்கு தினசரி 200 டன் மக்கும் குப்பை மாநகராட்சி நிர்வாகம் வழங்கும் தீர்மானம் ஆட்சேபத்துக்குரியதாக உள்ளது. சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குப்பையை சேகரிக்க டன் ஒன்றுக்கு ரூ. 3,500 வழங்குகிறது. ஆனால். அதே குப்பையை மாநகராட்சி நிர்வாகத்திடம் வாங்கும் தனியார் நிறுவனம் டன்னுக்கு ரூ.315 மட்டுமே வழங்கும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை, சாக்கடை வசதி என எதுவும் நிறைவேற்றாமல், மேயருக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய அலுவலக அறை தேவையா? (அப்போது அல்வா பொட்டலத்தை காண்பித்தார்).

இதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசும்போது, நிர்வாக வசதிக்காக அறை புதுப்பிக்கப்பட்டுள்ளது, என்றார்.

அப்போது, திமுக – அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்ற ஆளும்கட்சி தலைவருக்கு மேயர் உத்தரவிட்டார். இதையடுத்து, தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை பேசவிடாமல் தீர்மானங்களை நிறைவேற்றியதாக கூறியும், மேயருக்கு புதிய அலுலக அறை தயார்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மன்ற கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது கவுன்சிலர்கள் ‘அல்வா’ பொட்டலத்தை காட்டியபடி சென்றனர்.

பின்னர் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி கூறும்போது, தொழில் வரி, சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மாநகராட்சி சேகரிக்கும் குப்பையை குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது சரியல்ல. மாநகராட்சி முறைகேடுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

x