சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து 3-வது நாளாக பயிற்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின்போது அவர்கள் ஏற்கெனவே புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையென டீனிடம் வாக்குவாதம் செய்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 24-ம் தேதி இரவு பணி முடிந்து விடுதிக்கு நடந்து சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார். இச்சம்பவத்தை கண்டித்து கடந்த 2 நாட்களாக பணியை புறக்கணித்து பயிற்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இவ்வழக்கில் சிவகங்கை ஆவரங்காட்டைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து நேற்று 3-வது நாளாக பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்தனர். டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மதியழகன், செந்தில், ரமேஷ், ஆனந்த்ராஜ், தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், நாச்சமுத்து ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றேனர்.
பயிற்சி மருத்துவர்களிடம் நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க மறுத்து டீன் நேரில் வர வேண்டுமென பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து டீன் சத்தியபாமா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், ‘கல்லூரி வளாகத்தில் மின்விளக்குகள் இல்லை, சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. வார்டுகளில் ஓய்வறை இல்லை. விடுதிகளை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. தெருநாய்கள் அதிகளவில் திரிகின்றன என்று ஏற்கெனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றனர்.
எனக்கு புகார் வரவில்லை என்று டீன் கூறியதும், சில மாதங்களுக்கு முன்பு நேரில் புகார் கொடுத்தோம் என பயிற்சி மருத்துவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டீன் கூறினார். எனினும் போராட்டம் தொடர்ந்தது. அதன் பின்பு துணை முதல்வர் விசாலாட்சி பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். போராட்டத்தை கைவிட்டு பயிற்சி மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், ‘குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக டீன் உறுதியளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும்’ என்று கூறினர்.
நோயாளிகள் பாதிப்பு: சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் மருத்துவர்களுக்கு உதவியாக பயிற்சி மருத்துவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடத்தியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.