புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஏப்ரல் 6-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடத்த கிறிஸ்தவ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாட்ட அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன், மாவட்டத் தலைவர் ரூஸ்வெல்ட் மற்றும் நிர்வாகிகள், எஸ்.பி. ஆல்பர்ட் ஜானிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இயேசு கிறிஸ்து இறந்த நாளான புனித வெள்ளி ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை தியாகம் மற்றும் அமைதி நாளாக ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் அனுசரிக்கின்றனர். இந்த நாளில் மதுபானக் கடைகளை மூட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் மது விற்பனை இல்லாத சிறப்பு நாட்கள் பட்டியலில் புனித வெள்ளியையும் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 6ம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உண்ணாவிரதம் நடத்தப்படும். உண்ணாவிரத்தை ஆயர் ஸ்டீபன் அந்தோணி தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மதுவிலக்கு சபைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.