கடலூர்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி விடுதியில் அடிப்படை வசதி கேட்டு மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இருவேளை பாடப்பிரிவுகளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கடந்த இரு வாரத்திற்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்தும் சரிசெய்யப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மாணவிகளின் கோரிக்கைகள் சரி செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சிதம்பரம் - கடலூர் புறவழிச் சாலையில் மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளார் சௌமியா, மாவட்ட துணை செயலாளர் சிவநந்தினி, விடுதி கிளை தலைவர் புவனேஸ்வரி, செயலாளர் அருணா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் அரவிந்த், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்டோர் அங்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் அனைத்து குறைகளும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.