புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை விமர்சித்து நகரெங்கும் போஸ்டர்கள்: காவல் நிலையத்தில் புகார் 


புதுச்சேரி: பொதுப்பணித்துறை அமைச்சரை விமர்சித்து நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் போஸ்டர் ஒட்டி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் என்.ஆர்.காங்கிரஸார் புகார் தந்துள்ளனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் தீனதயாளன் உட்பட 3 பேரை சிபிஐ லஞ்சவழக்கில் கைது செய்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பொறுப்பேற்று ராஜினாமா செய்யக்கோரி சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் போராட்டம் நடத்தி வெளியேற்றப்பட்டனர். நகரெங்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விமர்சித்தும், ராஜினாமா செய்யக்கோரியும் திமுக தொடங்கி பல்வேறு அமைப்புகள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் புதுச்சேரி பெரியக்கடை காவல்நிலையத்தில் மனு தந்தனர். அதன் விவரம்: சிபிஐயால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் உள்ளார். அவரின் கைது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக களங்கம் ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆதாரமில்லாத தகவலை அடிப்படையாக கொண்டு அவதூறு பரப்பும் செயல் அடிப்படையில் தினமும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அமைச்சர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் புகார் மற்றும் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

x