புதுச்சேரி: சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் செல்வம் கூட்டத் தொடரின் முடிவுரையை வழங்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நேரு (எ) குப்புசாமி, ஏ.கே.டி.ஆறுமுகம், வைத்தியநாதன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்களுக்குத் தேவையான லேப்டாப் போன்றவைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “பத்திரிகையாளர்களுக்கான லேப்டாப், செல்போன் வழங்கப்படும். மனைப் பட்டா கேட்டுள்ளனர். அவர்களுக்கு வீட்டு வசதி சங்கம் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து எம்எல்ஏக்கள், “பத்திரிகையாளர்களுக்கான அரசு அடையாள அட்டை ஒவ்வொரு ஆண்டும் கேட்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் அடையாள அட்டை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர். அதற்கு முதல்வர், “அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும்” என்றார்.
மேலும், “விதவை பெண்களுக்கு அரசின் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, “அவர்களுக்கான உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் தெரிவித்தார்.