புதுச்சேரி: காரைக்காலில் ரூ.130 கோடியில் ஸ்மார்ட் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்தியஅரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
காரைக்கால் மீனவர்கள் உட்பட 13 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் இலங்கை கடற்படையினர் சுட்டத்தில் ஒரு மீனவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து விமானம் மூலமாக சென்னை மீனவர்கள் வந்தனர். இதில், காலில் குண்டு அடிப்பட்ட மீனவரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை நேரடியாக தொடர்பு கொண்டு உயர்தர சிகிச்சை அளிக்க ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வும் ஆளுநர் ஏற்பாடு செய்தார். இந்நிலையில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள், அனைத்து மீனவப் பஞ்சாயத்து குழுவினரோடு ஆளுநர் கைலாஷ்நாதனை நேற்று நேரில் சந்தித்தனர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க எடுத்த நடவடிக்கை களுக்காக ஆளுநருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க உரையில் மீனவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை ஆளுநர் குறிப்பிட்டு பேசியதற்காகவும் நன்றி தெரிவித்தனர்.
அப்போது குண்டடிப்பட்ட மீனவரிடம் நலம் விசாரித்த ஆளுநர் அவர்களிடம் கூறுகையில், "எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக எழும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன் . கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தபோது மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து பேசினேன். இதன் அடிப்படையில் காரைக்கால் மீனவர்கள், அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் தொலைநோக்கு பார்வையுடன் செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் பகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. மீனவர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைக்க பிஎம்எம்எஸ்ஒய் (PMMSY) திட்டத்தின் கீழ் ரூ.130 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இத்திட்டம் விரைவில் காரைக்கால் மீனவ மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட உள்ளது" என்று குறிப்பிட்டார்.