திருப்பரங்குன்றம் மலையில் சிறப்பு தொழுகை முயற்சி? - இந்து மக்கள் கட்சி புகார்


மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ரம்ஜானையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தி முயற்சிப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் மதுரை காவல் ஆணையர் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித் தோப்பில் யாரும் தொழுகை நடத்த தடை விதிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து வழக்கும், மலை மீது ஆடு, கோழி போன்ற அசைவ உணவு சமைக்கவும், கொண்டு செல்லவும் தடை விதிக்க கோரிய வழக்கும் இன்னும் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் ரம்ஜானையொட்டி நெல்லித்தோப்பில் தொழுகை நடத்த இஸ்லாமிய அமைப்புகளும், சிக்கந்தர் தர்கா நிர்வாகமும் மீண்டும் முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மீண்டும் மதப் பிரச்சினையை கிளப்பும் வகையில் ரம்ஜானை காரணம் காட்டி இஸ்லாமிய அமைப்புகள் மலை மீது தொழுகை நடத்த முயற்சிப்பதை முன்கூட்டியே காவல் துறையினர் தடுக்க வேண்டும். இதற்கு திட்டமிடும் எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி, சிக்கந்தர் தர்கா நிர்வாகத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

x