சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் விஜயின் தளபதி பட்டம் மாற்றப்பட்டுள்ளது.
தவெகவின் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாக நடந்து வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து 17 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் பேசிய தவெக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பேசும் போது, "இனிமேல் விஜய்க்கு தளபதி என்ற பட்டம் தேவையில்லை. அதற்கு பதிலாக 'வெற்றி தலைவர்' என்ற பட்டத்தை வழங்குகிறேன். இதுவரை நாம் நமது தலைவரை 'தளபதி' என்று அழைத்தோம். இனிமேல் அந்த பட்டம் அவருக்கு தேவையில்லை. அதற்குப் பதிலாக 'வெற்றி தலைவர்' என்று ஒரே குரலுடன் அவரை அழைப்போம்" என்று அவர் பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிந்தார்.
இதை ஏற்றுக்கொள்ள விரும்புவோர் கையை தூக்கலாம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியதும், கூட்டத்தில் இருந்த அனைவரும் கையை தூக்கினர். இனிமேல் 'தளபதி' என்பதற்குப் பதிலாக, 'வெற்றி தலைவர்' என்று விஜய் அழைக்கப்படுவார்.