கொடைக்கானலில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி


படம்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை கோடை சீசனுக்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக கொடைக்கானல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர். ஏப்ரல் முதல் ஜூன் வரை கொடைக்கானலில் கோடை சீசன் காலம். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.

வரும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. அப்போது வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இந்நிலையில், பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை, குறிஞ்சியாண்டனர் கோயிலுக்கு செல்லும் சாலை மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சீசன் சமயத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது சாலை அமைக்கும் பணி மேற்கொண்டால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும். கோடை சீசன் தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், உடனடியாக சாலைகளை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x