திருவண்ணாமலை: ஆவூர் கிராமத்தில் உள்ள நகை அடகு கடையில் நடைபெற இருந்த கொள்ளையை தடுத்து நிறுத்திய 2 காவலர்களுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காவல் நிலையத்தில் பணி செய்யும் காவலர்கள் இளங்கோவன், ராஜபாண்டி ஆகியோர ஆவூர் ஊராட்சியில் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆவூர் பிரதான சாலையில் உள்ள நகை அடகு கடை முன்பு ஒருவர் நின்றிருந்தார். நகை அடகு கடையின் முன்பக்க ஷட்டர் சற்று திறந்திருந்தது.
இதையறிந்த 2 காவலர்களும் நகை அடகு கடை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அடகு கடையின் உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்கும் முயற்சியில் 2 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 கொள்ளையர்களையும் பிடிக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது அடகு கடை முன்பு நின்றிருந்தவர் கொடுத்த தகவலில், உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து, 2 காவலர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் காவலர் இளங்கோவன் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார். காவலர்களின் துரித நடவடிக்கையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் தப்பின. இது குறித்து நகை அடகு கடை உரிமையாளர் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில், வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு, 3 கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், திருவண்ணாமலையில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆய்வு செய்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், நகை அடகு கடையில் நடைபெற்ற இருந்த கொள்ளை முயற்சியை தடுத்த காவலர்கள் இளங்கோவன், ராஜபாண்டி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் தலா ரூபாய் ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.