கோவை: கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து கோவையில் முதல் முறையாக நடத்தும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று (மே 28) தொடங்கியது.
இந்திய ஏரோநாடிக்கல் சொடைசட்டியின் தலைவரும், டிஆர்டிஓ முன்னாள் தலைவருமான சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில் நகரான கோவை ராணுவ தளவாட உற்பத்தியில் பங்களிக்க தேவையான கட்டமைப்பு வசதியை கொண்டுள்ளது. கரோனா நோய்தொற்று பரவலை எதிர்கொள்ள கோவை தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன. மக்கள் பலர் உயிரை காக்க உதவின. கோவை மாவட்டம் ராணுவ தளவாட உற்பத்தியில் சிறப்பாக திகழ அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்திய ராணுவத்தின் தக் ஷன் பாரத் பகுதியின் தலைமை அதிகாரி லெப்டினெட் ஜெனரல் பரன்பிர் சிங் பிரார் பேசும் போது, இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பலவித தளவாடங்கள் தேவையை பூர்த்தி செய்ய கோவை தொழில்துறையினருக்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம். கோவையில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சி எதிர்வரும் காலங்களில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம். என்றார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம், கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின் இயக்குநர் சுந்தரம் ஆகியோர் கூறும் போது, இந்திய ராணுவம் சார்பில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோவையில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவும், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல வகையான ராணுவ தளவாடங்களையும் பார்த்து அதன் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். கண்காட்சி நாளை மாலை 4.30 மணிக்கு நிறைவடைகிறது. என்றார்.
முன்னதாக நேற்று காலை ராணுவத்தினர் கொடிசியா வளாகத்தில் வெடிகுண்டுகள் வெடிப்பது போன்றும் தீவிரவாத தடுப்பு குறித்து அளித்த ஒத்திகை நிகழ்வு, காட்சிப்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வகையிலான மோட்டார் வாகனம், அதி நவீன டிரோன்கள் மற்றும் ராணுவ இசைக் குழுவினரின் நிகழ்ச்சி ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.