‘வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்தே’ - தவெகவை தெறிக்கவிட்ட போஸ்டர்; பரபரப்பு விளக்கம்


சென்னை: தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ‘வருங்கால முதல்வரே’ என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையாகியுள்ளது.

தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் 120 மாவட்டங்களாக தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளருடன் 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த சூழலில் செங்கல்பட்டு, ஈசிஆர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், “ தளபதி அவர்களை பொதுக்குழுவுக்கு அழைத்துவரும் எங்கள் அரசியல் ஆசான் தவெக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சர் அவர்களே” என புஸ்ஸி ஆனந்துக்கு போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. இப்போஸ்டரில் சென்னை புறநகர் மாவட்ட செயலாலர் ஈசிஆர் சரவணன் அடித்துள்ளதாக போஸ்டரில் உள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த ஆனந்த், “ நீங்கள் இதை என்னிடம் கேட்கலாமா. நான் தவெகவின் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன். இது விஷமிகளின் செயல். தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர். 2026 தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராவார்.இந்நிலையில் சில விஷமிகள் வேண்டுமென்றே இத்தகைய போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது குறித்து கட்சியினர் விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.

x