திருவாரூர், மன்னார்குடியில் நில அதிர்வா? - வானில் பலத்த சத்தத்தால் மக்கள் பீதி; காரணம் என்ன?


திருவாரூர்: திருவாரூர், மன்னார்குடியில் நேற்று பலத்த சத்தம் கேட்டதுடன், கட்டிடங்களில் அதிர்வும் ஏற்பட்டதால், நிலநடுக்கமாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவாரூர், மன்னார்குடி, லட்சுமாங்குடி மற்றும் அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தின் ஒரத்த நாடு பகுதிகளில் நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு வானில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. இதை பலரும் உணர்ந்தனர். இந்த சத்தம் ஏற்பட்டபோது, பல வீடுகளில் ஜன்னல்கள் அதிர்வடைவதை பலரும் உணர்ந்தனர். மன்னார்குடி, ஒரத்தநாடு, லட்சுமாங்குடி, திருவாரூர் பகுதிகளில் இந்த சத்தத்தையும், கட்டிடங்களில் ஜன்னல்கள் அதிர்வடைந்ததையும் பொதுமக்கள் பரவலாக உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்த சத்தம் கேட்கும்போது, மன்னார்குடி பகுதியில், தஞ்சை விமானப் படை பயிற்சி மையத்தில் இருந்து பறந்து சென்ற 2 ஜெட் விமானங்களை பலரும் பார்த்துள்ளனர். அதில் இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்ட சத்தமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தாலும், கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அதிர்வடைந்தது ஏன் ? இது நில அதிர்வாக இருக்கலாமா ? என பொதுமக்கள் அச்சத்துடன் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

x