குன்னூர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து; 23 கடைகள் எரிந்து நாசம் - பல கோடி சேதம்


நீலகிரி: குன்னூர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டதில், 23 கடைகள் எரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் தீ விபத்த ஏற்பட்டது. தீ அருகே உள்ள கடைகளுக்கும் பரவியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து ஓடினர்.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். நகரப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீரை எடுத்து வர இயலாததால் தீயணைப்பு துறையினர் திண்டாடினர். பின்னர் உதகை, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெயிண்ட் கடையில் இருந்த பொருட்களால் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் எஸ்.என்.நிஷா, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம்பருதி, குன்னூர் டிஎஸ்பி ரவி ஆகியோர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த திடீர் தீ விபத்தில் துணி, பெயிண்ட், மளிகை கடைகள் என 23 கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.

மவுண்ட்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. குன்னூர் சப் டிவிஷன் மற்றும் உதகையில் இருந்து நூற்றுக் கணக்கான போலீஸார் வரவழைக்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவை பகலாக்கும் வகையில் கொழுந்து விட்டு எரிந்த இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை வரை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் புகை மூட்டம் இருந்ததால் தீயணைப்பு துறையினர் அதனை கட்டுப்படுத்த போராடினர். இதன் காரணமாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, நகராட்சி ஆணையர் இளம் பரிதி, நகராட்சி தலைவி சுசீலா ஆகியோர் சேதமான கடைகளை பார்வையிட்டு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். எரிந்த கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x