நீலகிரி: உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் பழங்குடியின இளைஞர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கவர்னர்சோலை வனப்பகுதியில் உள்ள கொல்லக்கோடு மந்தை சேர்ந்த மாசத் என்பவரின் மகன் கேந்தர் குட்டன்(38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற எருமைகள் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாக எருமைகள் வராததால் அவற்றை தேடி அழைத்து வரவும், விறகு சேகரிக்கவும் கேந்தர் குட்டன் வனப் பகுதிக்குள் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் இரவு முழுவதும் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தேடியபோது கேந்தர் குட்டனின் உடல் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரை புலி அடித்துக் கொன்று பாதி உடலை சாப்பிட்டுள்ள தை கண்டு கிராம வாசிகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரகர்கள் கிருஷ்ணகுமார் தலைமையான வனத் துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் புலி தாக்கி ஒருவர் இறந்துள்ளார். மேலும் அவ்வப்போது மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த குமரேஷ், ரஞ்சித் குட்டன் ஆகியோர் கூறியதாவது: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு மாயமாகி விட்டார். அவர் நிலை என்ன என்று தெரியவில்லை. தற்போது ஒருவரை புலி அடித்துச் சாப்பிட்டு உள்ளது. வேட்டையாடும் திறனை இழந்த புலிகள் மனிதர்களை குறி வைத்து தாக்கும். அந்த வகையில் இதுவும் மனிதர்கள் மட்டும் தாக்கும் புலியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.
புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், வனப்பகுதியில் வசிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். ஆனால் எங்களது கலாச்சாரப்படி எங்களுக்கு எருமை வளர்ப்பு மிகவும் முக்கியம். எருமைகள் வளர்ப்பிற்கு நகர்ப் பகுதியில் சரியான இடம் கிடையாது. வனப் பகுதியை ஒட்டிய இந்த இடம் தான் எங்களுக்கு சரியாக இருக்கும். எனவே, கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து உடனடியாக இந்த புலியை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரக்காடு பகுதியில் பெண்ணை வன விலங்கு தாக்கிக் கொன்ற நிலையில், தற்போது தோடரின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.