சென்னை: புதிதாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை இயற்றி தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்ற பால் வியாபாரி, ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவருடன் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86-ஆக அதிகரித்திருக்கிறது.
திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்துள்ளனர். இருப்பினும் மேல்முறையீட்டு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசை தடுப்பது எது என்பது தெரியவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, தற்கொலைகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. உடனடியாக சூதாட்டத்துக்கு தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.