போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குவதில் நிதி நெருக்கடியை காரணமாக கூற முடியாது: ஐகோர்ட்


அரசுப் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு, நிதி நெருக்கடியை காரணமாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை அரசுப் போக்குவரத்துக் கழக பழநி கிளையில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து 2024-ல் ஓய்வு பெற்றவர் சவுந்திரராஜன். இவர், தனக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, விடுப்பு ஊதிய பாக்கி ரூ.78,33,778 வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில், "அரசுப் போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றன. ஓய்வூதியர்களுக்கான பணப் பலன்கள் நவ. 2022 வரை தீர்வு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் சீனியாரிட்டி வரும் வரை காத்திருக்க வேண்டும்" என பதிலளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து, மனுதாரரின் வருங்கால வைப்பு நிதி தொகையில் 50 சதவீதத்தை 2024 ஜூலைக்குள் வழங்க வேண்டும். பணிக்கொடை உள்ளிட்ட பிற பலன்களை இந்த ஆண்டு ஜூலைக்குள் வழங்க வேண்டும் என தனி நீதிபதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், "பணப் பலன்களை போக்குவரத்து ஊழியர்களுக்கு தானமாக வழங்குவது இல்லை. அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு நிதி நெருக்கடியை காரணமாகக் கூறுவதை ஏற்க முடியாது. மேல்முறையீட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

மற்றொரு வழக்கு: கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற திருமறைநாதன் என்பவர், ஓய்வூதியப் பலன்கள் ரூ.56,72,236 வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை வாசிர்தத நீதிபதி பட்டுதேவானந்த், "மனுதாரருக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தாமதத்துக்கு 6 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்

x