நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 454 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி படகில் இருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி , இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்ட், பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், அந்தோணி சீசரியன், முத்துகளங்கியம், கிறிஸ்துராஜா ஆகிய 11 மீனவர்களைக் கைது செய்தனர்.
பின்னர், விசைப்படகையும், மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசென்று, யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஜனவரி முதல் 159 தமிழக மீனவர்கள், 21 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.