மதுரை: காமராஜர் பல்கலை கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்கலை. கல்வி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி பேரவைக் கூட்டம் இன்று நடந்தது. கல்லூரிக் கல்வி ஆணையரும், பல்கலை கன்வீனர் குழுத் தலைவருமான இ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், சிண்டிக்கேட் உறுப்பினர்கள், கல்வி பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஆசிரியர்கள், ''ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதில் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு மேல் தாமதம் உள்ளது. இப்பிரச்சினையில் கன்வீனர் குழுத் தலைவர் தலையீட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என, உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கன்வீனர் குழுத்தலைவர், ''இவ் விஷயம் தீவிரமாக பரிசீலனையில் உள்ளது,'' என்றார். மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள காமராஜர் பல்கலை கல்லூரியின் நிதிநிலை மற்றும் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரி இன்றி இதை அரசுக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்லூரிக் கல்வி அதிகாரிகள், உறுப்புக் கல்லூரியின் மாணவர் எண்ணிக்கை மற்றும் நிதித் தேவை காரணம் காட்டி அரசுக் கல்லூரியாக்க மாநில அரசை வலியுறுத்தவேண்டும் என, உறுப்பினர் ஜி.பிரபாகரன் கோரிக்கை விடுத்தார்.
பேராசிரியர் வேளாங்கன்னி பேசும் போது, ''இப் பல்கலை அனுமதியைப் பெறாமல், பல்கலைக் கல்லூரி ஜி.பி.எஃப் நிதியிலிருந்து நிதியை எடுத்து பிற தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. கல்லூரியின் வங்கிக் கணக்கை கல்லூரி, பல்கலைக்கழகம் இணைந்து கையாளவேண்டும். இது மீறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும். இதற்காக விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டும்,'' என்றார்.
உறுப்பினர் சதாசிவம் பேசியது: ''இக்கல்லூரியில் 22 நிரந்தர ஆசிரியர்களும், 70க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, மேலும் இக்கல்லூரி ஒரு தன்னிறைவான மாதிரியில் நடத்தப்படுகிறது. இருப்பினும், பல்கலைக்கழக வழிகாட்டுதல்படி ஒரு தனிச்சட்டத்தைக் கொண்டுள்ளது. நிதி திசை திருப்பல் குறித்த விசாரணைக்கு பதிலாக ஒரு ஆசிரிய உறுப்பினர் குறித்த விசாரணை நடத்தவேண்டும்,'' என்றார்.
உறுப்பினர்கள் கோரிக்கைக்கு பதிலளித்த கல்லூரி கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி, ''இக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவது குறித்த எந்தவொரு முடிவையும் பிறகு எடுக்கலாம். இது அரசின் கொள்கை ரீதியான விஷயம். தற்போது எதுவும் கூறமுடியாது. நிதி பிரச்னை குறித்தும் விசாரிக்கப்படும்,'' என்றார்.
இப்பல்கலை விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்கள் உரிய சம்பளம் வழங்குவதில்லை. இதற்கு நிரந்தர தீர்வு தேவை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.