சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டு சிறை - புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு


புதுச்சேரி: சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த மீனவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் மீனவர் முனியப்பன் (58), இவர் 5 வயதுடைய சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதை யாரிடமாவது தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். சிறுமி பாதிக்கப்பட்டதை அறிந்து கிருமாம்பாக்கம் போலீஸில் புகார் கடந்த 2021ல் தரப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.

அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி இன்று அளித்த தீர்ப்பில் போக்சோ சட்டத்தின் பிரிவு 10 இன் கீழ் 5 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை விதித்தார். அதேபோல் ஐபிசி பிரிவு 363 இன் கீழ் 3 ஆண்டுகளும், ஐபிசி பிரிவு 323 இன் கீழ் 1 ஆண்டும், ஐபிசி பிரிவு 506(ii) இன் கீழ் 3 ஆண்டுகளும் கடும் சிறைத் தண்டனை விதித்தார்.

அபராதமாக ரூ.26 ஆயிரம் விதித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் தர அரசுக்கு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

x