சிவகங்கை: திருப்புவனம் பேரூராட்சிக்கு ரூ.3 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்த நிலையில், அப்பேருந்து நிலையத்தை குப்பைக்கிடங்கில் அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர் கோயில், அதனருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்கள் உள்ளன. இங்குள்ள வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்வதற்கான மையப் பகுதியாக திருப்புவனம் உள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோயில் அருகே செயல்பட்ட பேருந்து நிலையம் சில காரணங்களால் மூடப்பட்டது. பின்னர் ஒன்றிய அலுவலகம் அருகே பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு, தேவஸ்தான பிரச்சினையால் மூடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்கு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறுகிய இடம் என்று கூறி அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஏற்கவில்லை.
சில மாதங்களுக்கு முன், சிவகங்கை தேவஸ்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிய அலுவலகம் அருகே பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த முடிவு திடீரென கைவிடப்பட்டது. கடந்த வாரம் தற்போதைய குப்பைக் கிடங்கு மற்றும் அருகேயுள்ள வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான இடத்தைச் சேர்த்து பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் ரூ.3 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதை வரவேற்று பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் தமாகா கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் குப்பைக்கிடங்கில் பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தமாகா பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி கூறியதாவது: முதலில் ஒன்றிய அலுவலகம் அருகே பேருந்து நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, திடீரென குப்பைக் கிடங்கில் அமைக்க முடிவு செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருப்பதாகக் கூறி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரே இந்த இடத்தை நிராகரித்து விட்டார்.
மேலும் அந்த இடத்தையொட்டி மதுரை-ராமேசுவரம் ரயில் பாதை செல்கிறது. எதிர்காலத்தில் இரட்டை வழித்தடமாக மாற்றும் போது மேலும் இடநெருக்கடி ஏற்படும். தவிர அருகே மயானமும் உள்ளது. இதனால் ஒன்றிய அலுவலகம் அருகே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் கருத்துகளைக் கேட்க கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.