சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்கான ஓய்வறை பூட்டிக் கிடந்தது. வளாகத்தில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை, சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க்குகள் இயங்கவில்லை. பாதுகாப்பு குறைபாடுகள் அதிகளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 24ம் தேதி இரவு பணி முடிந்து பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த இளைஞர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்கினார். அப்போது ஆட்கள் வந்ததும் தப்பியோடினார்.
இது குறித்து கல்லூரி டீன் சத்திய பாமா அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் அரசு உத்தரவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடைப்பிடிக்க வில்லையென பயிற்சி மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு உத்தரவிட்டது.
அதன்படி அனைத்து சிசிடிவி கேமராக்களும் இயங்க வேண்டும். அவற்றின் காட்சிப் பதிவுகளை கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்க வேண்டும். வார்டுகள், வழித்தடங்கள், பணி அறைகள், வளாகத்தில் முக்கிய இடங்களில் மின் விளக்குகள் பொருத்தியிருக்க வேண்டும். ஒப்பந்த பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும்.
புறக்காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இருக்க வேண்டும். அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் ஓய்வறை ஏற்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
மேலும் டீன் தலைமையில் மருத்துவமனை பாதுகாப்பு குழு, வன்முறை தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டன. ஆனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விடுதிக்கு செல்லும் வழித்தடங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும், அதற்கான ஹார்டு டிஸ்க் செயல்படவில்லை. தேவையான பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து காய பிரிவு மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்ட வார்டுகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் பூட்டிக் கிடந்தன.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் மீதான அத்துமீறல் சம்பவத்தை அடுத்து நேற்று அவசர, அவசரமாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்ய வந்த மருத்துவக் கல்வி இயக்குநரக குழுவினர பூட்டிக் கிடந்த பயிற்சி மருத்துவர்களுக்கான ஓய்வறையை திறந்துவிட்டனர். இனி பெண் மருத்துவர்கள் பாதுகாப்பில் அஜாக்கிரதை காட்டாமல் அரசு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டுமென பயிற்சி மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஏற்கெனவே பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம்’ என்றனர்.