திருவாரூர்- அகஸ்தியம்பள்ளி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்!


திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

திருவாரூர்- காரைக்குடி, திருவாரூர்- அகஸ்தியம்பள்ளி இடையே அகல ரயில் பாதையை மின்சார வழித்தட பாதையாக மாற்றுவதற்கு திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 பாதை திட்டங்களும் சேர்த்து ஒரே திட்ட பணிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி வரை முதல் கட்டமாக மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. முதன்மை வணிக மின் பொறியாளர் சோமேஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் இந்த சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்தனர்.

இதையொட்டி, திருவாரூர் ரயில் நிலைய சந்திப்பில் சோதனை ஓட்டம் செல்லக்கூடிய ரயில் இன்ஜின் இணைக்கப்பட்டு, காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. தொடர்ந்து, அகஸ்தியம்பள்ளி வரை அனைத்து மின் இணைப்பு, துணை மின்மாற்றிகள், மாஸ்ட் வயரிங் கேட் இணைப்புகள், பாலத்தின் வழியாக செல்லும் மின் பாதை பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மீண்டும் அகஸ்தியம்பள்ளியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருவாரூர் சந்திப்புக்கு ரயில் வந்தது. முன்னதாக, சோதனைக்கு சென்ற அதிவேக ரயிலுக்கு, ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் சோதனை ரயில் சென்றடைந்தது.

இது குறித்து ஓய்வு பெற்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மன்னை மனோகரன் கூறியதாவது: திருவாரூர்- திருத்துறைப் பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரை மின்மயமாக்கம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் திருவாரூரில் டீசல் இன்ஜின் மாற்றுவதற்கான நேரம் குறையும். மேலும், எஞ்சியுள்ள திட்ட பணிகளான திருத்துறைப்பூண்டி முதல் காரைக்குடி வரையிலான மின்மயமாக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

x