‘நீங்களா பதவி விலகுங்க, இல்லன்னா அவமரியாதையை சந்திப்பீங்க’ -இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!


சென்னை: எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். அதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு வந்தோம். எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலாளர்களை வைத்து தாக்கினார்கள். அதுதான் உண்மை.

எங்களை தாக்கிய பின், அடியாட்களை தலைமை கழகத்திற்கு அழைத்து வந்துவிட்டு எங்கள் மீது பழிபோகிறார்கள். இது அனைத்தும் காவல் துறையினரின் பதிவுகளில் உள்ளது. அதேபோல் பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் சொல்கிறேன். அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்ற சூழல் வரும். அதனை திரும்ப திரும்ப சொல்கிறேன்.

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வெற்றிபெற கூடிய வாய்ப்புகளே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வருகிறார். ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம் என்று தானே என்னிடம் ஆட்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. ஆனால் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை.

இதனால் எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

x