சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு; மனிதசங்கிலி போராட்டம்!


கடலூர்: சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சி மற்றும் சி.கொத்தங்குடி, சி.தண்டேஸ்வரநல்லூர், உசுப்பூர், பள்ளிப்படை உள்ளிட்ட 7 ஊராட்சிகளையும் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு இப்பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக லால்புரம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார்- ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் உண்ணா விரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று நேற்று காலை லால்புரம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் ஊராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கை குழந்தைகளுடன் சில பெண்கள் மனித சங்கிலியில் பங்கேற்றனர். போராட்ட ஒருங்கிணைப் பு குழுத் தலைவர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்ட குழுவினர் கூறுகையில், "லால்புரம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 300 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ளது. விளைநிலம் உள்ள இடத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அரசாணை உள்ளது. மேலும் நகராட்சி யுடன் இணைத்தால் இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும். பாதாள சாக்கடை வரி, குடிநீர் மற்றும் சொத்து வரி அதிகமாக விதிக்கப்படும். இப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள் கூலி தொழிலாளர்கள். எனவே இவர்களின் வாழ்வாதார த்தை கருதி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.

x