திருச்சி: திருச்சி மாநகரில் மழைநீர் தேங்குவதை தடுக்க முக்கிய வாய்கால்களில் ரூ.110 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு சுவர், வடிகால்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான மாநகராட்சி வரவு- செலவு திட்ட அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் மு.அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர் தி.முத்துச் செல்வம் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் வரவு- செலவு திட்ட அறிக்கையை சமர்பித்தனர். ஆணையர் வே.சரவணன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், வரவு- செலவு திட்ட அறிக்கையை தி.முத்துச்செல்வம் வாசித்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை ரூ.236 கோடி மதிப்பில் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* திருச்சி மாநகரில் முக்கிய வாய்க்கால்களில் வெள்ளத்தடுப்பு சுவர் மற்றும் விரிவான மழைநீர் வடிகால்கள் கட்டி மழைநீர் தேங்குவதை தடுக்கும் பணிகள் ரூ.110 கோடியில் அரசின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும்.
* மாநகரில் புதைசாக்கடை, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகள் ரூ.102 கோடியில் சீரமைக்கப்படும். சில்லறை வணிகம் நடைபெறும்விதமாக ரூ.60 கோடி மதிப்பில் காந்தி மார்க்கெட்டில் புனரமைபு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* பாரதிதாசன் சாலையில் தற்போது உள்ள மாநகராட்சி பயணியர் விடுதியில் ரூ.50 கோடியில் கூடுதல் அறைகள், வணிக வளாகங்கள் கட்டுவது உட்பட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மாநகரில் 10 இடங்களில் தலா 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ரூ.20.31 கோடியில் கட்டப்படும். 12-வது வார்டுக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் தென்கரை பகுதியை ரூ.15 கோடியில் அழகுப்படுத்தப்படும்.
* மாநகராட்சி மைய அலுவலகத்துக்குள் ரூ.50 கோடியில் கூடுதல் அலுவலகக் கட்டிடம் மற்றும் வரவேற்பு வளைவு கட்டும் பணி மேற்கொள்ளப் படும்.
* 5 மண்டலங்களுக்கும் தலா ரூ.1 கோடியில் ஒரு நூலகம் வீதம் 5 நூலகங்கள், தலா ரூ.1 கோடியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் என 5 உள் விளையாட்டு அரங்கங்கள் கட்டித் தரப்படும்.
* கீழரண் சாலையில் முருகன் திரையரங்க வளாகத்தில் ரூ.2 கோடியில் திருமண மண்டபம் கட்டப்படும்.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் 3 பாலங்கள்: 51-வது வார்டில் பீமநகர் பகுதியில் பைரோஸ் திருமண மண்டபம்- குழுமிக்கரையை இணைக்கும் வகையில் ரூ.2 கோடியில் கான்கிரீட் பாலம், அதே வார்டில் பங்காளி தெரு- குழுமிக்கரையை இணைக்கும் வகையில் ரூ.2 கோடியில் கான்கிரீட் பாலம், 34-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி புரம்- பிச்சைநகர் வரை 30 மீட்டர் தொலைவுக்கு 4.5 மீட்டர் அகலத்தில் ரூ.1.80 கோடியில் குறுக்குப் பாலம் என உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே 3 சிறு பாலங்கள் கட்டப்படும்.
நாளை பட்ஜெட் விவாதம்: மாமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, திருச்சி மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.1,308.16 கோடி, மொத்த செலவு ரூ. 1,437.11 கோடி. மொத்த பற்றாக்குறை ரூ.128.95 கோடி. பட்ஜெட் தொடர்பான விவாதம் நாளை (மார்ச் 28) நடைபெற உள்ளது.
முன்னதாக, மேயர் மு. அன்பழகன் தனது வரவு செலவுத் திட்ட உரையை வாசித்தார்.அதில், நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள் ரூ.10 கோடியில் அமைக்கவும், வெஸ்ட்ரி பள்ளி அருகில் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையில் இடவசதிக்கு ஏற்ப சாலையோர பூங்காக்கள் தலா ரூ.1 கோடியிலும், கோட்டத்துக்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு தலா ரூ.1 கோடியிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.10 கோடியில் வெள்ள பாதுகாப்பு உந்து நிலையங்கள் கட்டுவதற்கும், விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெரு பெயர் பலகைகள் ரூ.1 கோடியில் அமைக்கவும், அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசி, சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2 கோடியில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் 20 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகளை அகற்றிவிட்டு, புதிதாக 4,000 எண்ணிக்கையில் 40 வாட்ஸ் எல்இடி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பணிகள் திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மூலம் அரசிடம் நிதி உதவி பெற்று பஞ்சப்பூர் பகுதியில் ரூ.115 கோடியில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?: மேயர் விளக்கம்: பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் மேயர் மு.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது; நிதிநிலை அறிக்கையில் உள்ள ரூ.129 கோடி பற்றாக்குறை மாநகராட்சிக்கு வர வேண்டிய இதர நிதி ஆதாரங்களைக் கொண்டு சரி செய்யப்படும். மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரி ரூ.130 கோடி.
3-வது மண்டலத்துக்குட்பட்ட 5 வார்டுகளில் விரைவில் வழங்கப்பட உள்ள 20 ஆயிரம் புதை சாக்கடை இணைப்புகள் மூலம் வசூலாகவிருக்கும் கட்டணம், மாநகரில் 13 குடியிருப்புகள் வணிக நிறுவனங்களாக செயல்படுவது கண்டறியப்பட்டு, அவற்றுக்கு வணிக நிறுவனங்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளது. பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் வருவாய் போன்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு பற்றாக்குறையை சரி செய்வோம் என்றார்.