திருச்சி: பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மற்ற விவசாய சங்கத் தலைவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி நாளை (மார்ச் 28) நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) சார்பில், ‘விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரா விலையை நிர்ணயிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் எல்லையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மார்ச் 19-ம் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்று வெளியே வந்த விவசாயிகளை பஞ்சாப் காவல்துறையும், மத்திய துணை ராணுவமும் சேர்ந்து கைது செய்தன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், எஸ்கேஎம் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியனும் கைது செய்யப்பட்டு பட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
இதையடுத்து, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட சில விவசாய சங்கத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, பி.ஆர்.பாண்டியன் விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வந்தார். அவருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு அழைப்பின்பேரில் மார்ச் 19-ம் தேதி சண்டிகரில் நடைபெற்ற குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம். மத்திய அமைச்சர்கள் சிவராஜ்சிங் சவுகான், பியூஸ்கோயல், பிரகலாத்ஜோஷி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அனைவரும் அரங்கை விட்டு வெளியே வந்தோம்.
அப்போது, பஞ்சாப் அரசு காவல் துறையை ஏவி விட்டு, விவசாயிகளை தீவிரவாதிகளை போல கைது செய்து பட்டியாலா சிறையில் அடைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியா முழுவதும் இருக்கும் வர்த்தகர்களுடைய கருத்துகளை கேட்டு மே 4-ம் தேதி அடுத்தக்கட்ட கூட்டத்தை நடத்துவதென முடிவு எடுத்த நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் கைது நடவடிக்கையை பஞ்சாப் அரசு மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
சிறையில் உள்ள மற்ற தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி மார்ச் 28-ம் (நாளை) தேதி நாடு முழுவதும் அனைத்து அமைப்புகளும் தீவிரமான போராட்டம் நடத்த உள்ளனர்’ என்றார்.
பி.அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது: நூற்றுக்கு மேற்பட்ட விவசாய சங்கத் தலைவர்களை சிறையில் அடைத்து பஞ்சாப் அரசு கொடுமை செய்கிறது. மத்திய அரசு மறைமுகமாக இதற்கு துணை போகிறது. இதை கண்டித்தும், சிறையில் உள்ள விவசாய சங்க தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாளை (மார்ச் 28) நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தை தமிழகத்தில் மிக தீவிரமாக நடத்துவோம் என்றார்.